சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கும் திட்டத்தை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இந்தியாவின் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்திக்கான நிலக்கரி இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. ஜே.எம். ஃபைனான்ஷியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் மின்சார நுகர்வு 11 சதவீதம் அதிகரித்து 162 பில்லியன் யூனிட்களாக உயர்ந்தது. உச்சகட்ட மின் தேவை 17 சதவீதம் அதிகரித்து 269 ஜிகாவாட்டை எட்டியது. மொத்த மின் உற்பத்தியும் 11 சதவீதம் உயர்ந்து 173 பில்லியன் யூனிட்களாக இருந்தது.
இதற்கிடையே, நீர் மின் உற்பத்தி 16 சதவீதம் குறைந்து 19 பில்லியன் யூனிட்களாகச் சரிந்தது. இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட அனல் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
அனல் மின் உற்பத்தி 16 சதவீதம் உயர்ந்து 118 பில்லியன் யூனிட்களாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 13 சதவீதம் அதிகரித்து 29 பில்லியன் யூனிட்களாக உயர்ந்தது.
அனல் மின் உற்பத்திக்கான நிலக்கரித் தேவை அதிகரித்ததால், மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இருந்த 4.7 கோடி டன்னிலிருந்து 1.9 கோடி டன்னாகக் குறைந்தது. இது 60 சதவீத சரிவாகும்.
மேலும், சர்வதேசச் சந்தையில் இந்தோனேசிய நிலக்கரியின் விலை ஓராண்டில் 47 சதவீதம் உயர்ந்து, செப்டம்பரில் டன்னுக்கு 111 டாலராக இருந்தது. இதனால் நிலக்கரி கொள்முதல் செலவும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை செப்டம்பர் இறுதியில் ரூ.85,700 கோடியாக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் மின் தேவை, குறையும் நிலக்கரி இருப்பு, உயர்ந்துவரும் எரிபொருள் விலை ஆகியவை மின் துறையின் முக்கிய சவால்களாக உள்ளன
இந்நிலையில், அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியைப் போதுமான அளவில் இருப்பு வைப்பது முக்கியமானதாக உள்ளது. இதற்காக உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியுடன் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியையும் கலந்து பயன்படுத்தும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை அதிகரிப்பதுடன், ரூபாயின் மதிப்பு சரிவதால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி வாங்குவதற்கு இந்திய நிறுவனங்கள் கூடுதல் தொகை செலவிட வேண்டியுள்ளது. இதனால் மின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் இறக்குமதியை அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக நீடிப்பதால் மின்சாரத் தேவை உயர்ந்துள்ளது.இந்நிலையில், சில மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதும் கவலை அளிக்கிறது.
இதையடுத்து, உள்நாட்டின் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை ரயில்கள் மூலம் விரைவாகக் கொண்டு சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சர்வதேச நிலக்கரி விலை குறைந்து, ரூபாயின் மதிப்பு நிலைபெற்றால் இறக்குமதிச் செலவு குறைய வாய்ப்புள்ளது. அதுவரை உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, விநியோகம் மற்றும் மின் நிலையங்களின் இருப்பு ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.